இன்று பாட்டியின்
நினைவு தினம்.
எல்லா கோடை விடுமுறைக்கும்
பாட்டி ஊருக்குப்
போய் விடுவோம்.
பாட்டி யின்
நார்க்கட்டிலில்
நாளெல்லாம்
நாட்டுத் தைலத்தின்
நறுமணம் சூழ்ந்திருக்கும்
அம்புலிமாமா கதைகளைப்
படித்துக் காட்டி
வெற்றிலை இடித்துக்கொடுத்து,
இன்ன பிற ஏவல்களை
நிறைவேற்றி ,
பாட்டியுடன்
இரவு
இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்குப்
போயிருக்கிறேன்.
பக்கத்து வீட்டு
சுறு சுறு கோமு அத்தையும்
உடன் வரும்.
கை நாட்டுத்தான் என்றாலும்
நாநுனியில் காவியங்கள் எல்லாம்
நர்த்தனம் ஆடும்!
வீட்டில் வளர்த்த
நாய் பூனை
கிளி கோழி எல்லாம்
பாட்டியின்
மிலிட்டரி ஆணைக்குக்
கட்டுப்படும்!
வெள்ளைச் சேலையில்,
காதில் ,
அங்கும் இங்கும் ஆடும்
பாம்படம்.
பாட்டி பரிமாறிய
அடர்த்தியான நெய் மீன்
குழம்பின் ருசியைத்
தேடிக்கொண்டிருக்கிறேன் !
வேண்டுதல் எல்லாம்
வெளிப்படை தான் -
எல்லா மக்களும் நல்லா இருக்கணும்,
ஏம் பிள்ளைகளும் நல்லா இருக்கணும்
பிராயத்தில் கணவரைப்
பிரிய நேர்ந்து விட்டாலும் கூட
பிள்ளைகளைக் கருத்தாய் வளர்த்து
ஆளாக்கிய பிடிவாதக்காரர் .
மறைந்து ஆண்டுகள்
பலவாகி விட்டாலும் கூட
வெள்ளைச சேலை
முதியவர்கள் யாவரும்
பாட்டியாகவே தோன்றுகிறார்கள்!
No comments:
Post a Comment